அரியலூர், டிச;17
அரியலூர் மாவட்டத்தில் 17.12.2024 மற்றும் 18.12.2024 ஆகிய நாட்களில் கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கலந்துகொண்டார்.
இந்திய வானிலை மையத்தால் 17.12.2024 மற்றும் 18.12.2024 ஆகிய நாட்களில் அரியலூர் மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அனைத்து துறைகளுக்கிடையேயான மண்டலக் குழுக்கள் அந்தந்த பகுதிகள் மற்றும் தங்கள் வட்டத்திற்குட்படட்ட பதட்டமான மற்றும் தாழ்வான பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மண்டல குழுக்களால் மீட்பு பணிகளுக்கு தேவையான துறைவாரி தளவாட கருவிகளின் இருப்பு பட்டியலை பேரிடர் மேலாண்மை பிரிவில் பெற்று அந்தந்த பகுதிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் கூடுதலாக தளவாட இயந்திரங்களான JCB, மரம் வெட்டும் இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், ஜென்செட்டுகள் ஆகியனவற்றை உள்ளுர் பகுதிகளில் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலர் மூலமாக விபரங்கள் பெற்று, கிராம வாரியான பட்டியல் தயார் நிலையில் வைத்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
70 சதவீதத்திற்கு மேல் நீர் நிறைந்துள்ள ஏரிகள், குளங்களில், உபரி நீர் வெளியேற்றும் மதகுகளில் அடைப்புகள் இன்றியும், நீர் வரத்து மற்றும் நீர் வடிகால், ஆகியனவற்றை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் கண்டிப்பாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் எனவும், வெள்ளத்தால் பாதிக்கப்படகூடிய பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைத்திட ஏதுவாக பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், சமூக மையக் கட்டடங்கள் திருமண மண்டபங்கள் ஆகியனவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்களால் தேர்வு செய்திட வேண்டும் எனவும், அவ்வாறு தேர்வு செய்யப்படும், தற்காலிக நிவாரண முகாம்களில் குடிநீர் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்திட வேண்டும் எனவும், பாதிப்பு ஏற்படக்கூடிய நகர்புறங்கள் மற்றும் ஊராக பகுதிகளில் போதுமான அளவு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு மரங்கள் இருப்பு வைத்திட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து முதல் நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் தலைமையிடத்தில் தங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நிவாரண முகாம்களில் பாதிக்கபட்ட நபர்களை தங்க வைக்கும் போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, காலதாமதமின்றி உணவுகள் வழங்கப்படவேண்டும் எனவும், பாதிப்பு ஏற்படக்கூடும் பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களை முன்கூட்டியே மருத்துவமனை மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு அழைத்து வந்து மருத்துவ பராமரிப்பில் வைத்திட துணை இயக்குநர் (சுகாதாரம்) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நிவாரண முகாம்கள் துவங்கப்பட்ட நாள் முதல் முகாம்களில் தங்கியுள்ள நபர்களுக்கும் மற்றும் மழைக்கு பின்பு பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் தினந்தோறும் நடத்திட துணை இயக்குநர் (சுகாராரம்) உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வேளாண்மை பயிர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் நீரில் மூழ்கியதாக வரப்பெறும் புகார்கள் (பொது மக்கள் / தொலைக்காட்சி செய்திகள் / செய்திதாட்கள் சமூக வலைதளங்கள்) மீது சாரநிலை அலுவலர்களை கொண்டு கள ஆய்வு செய்திடவும், விவசாயிகளின் குறைகளை களஆய்வின் போது கனிவுடன் பதில் அளிக்கவும், சார்நிலை அலுவலர்களுக்கு இணை இயக்குநர் (வேளாண்மை) மற்றும் துணை மண இயக்குநர் (தோட்டக்கலை) ஆகியோர் தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் எனவும், துறைச் சார்ந்த அனைத்து சேத விபரங்களை உடனுக்குடன் பொறுப்பு அலுவலர்கள் பேரிடர் மேலாலம்மை பிரிவிற்கு மின்னஞ்சல் அல்லது நேரடியாக அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேபோன்று நீர்த்தேக்க தொட்டிகளை தொடர்ந்து குளோரின் கொண்டு சுத்தம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிடவும், அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அதனருகே குழந்தைகளை செல்லவோ, விளையாடவோ அனுமதிக்க கூடாது. மேலும் இதுதொடர்பாக பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கைகள் அனுப்பப்பட வேண்டுமெனவும், அனைத்து துறை அலுவலர்களும் வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை- 2024 காலத்தில் கடந்த 12.12.2024 மற்றும் 13.12.2024 ஆகிய நாட்களில் பெய்த கனமழையினால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததன் காரணமாக விளை நிலங்களில் பயிரிடப்பட்டு, 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் சேதமடைந்த பயிர்கள் குறித்த விவரங்களை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் மூலம் வட்டார அளவில் களஆய்வு செய்து அதன் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்திட ஏதுவாக குறுவட்ட அளவில் கணக்கெடுப்பு பணி அலுவலர்களை கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பற்ற பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், அப்பணிகள் நடைபெறும் போது மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட எவரும் அதனருகே செல்லாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியர்கள் மணிகண்டன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்