தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களான அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம், கருப்பாநதி நீர்த்தேக்கம், கடனாநிதி நீர்த்தேக்கம், ராமாநதி நீர்த்தேக்கம் உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராமாநதி அணையானது தற்போது தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1550 கன அடிக்கு மேல் நீரானது வெளியேற்றம் செய்யப்பட்டு ,வருகிறது வெள்ள அபாய எச்சரிக்கையானது அந்த பகுதியில் உள்ள கோவில், சர்ச், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒலிபெருக்கிகள் வாயிலாக ராமநதி ஆற்றுப்படுகை கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு தற்போது விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சராசரியாக 188 மில்லி மீட்டருக்கு மழை பெய்துள்ளது
அதன்படி, தென்காசி சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக 230 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ராமநதி அணைப்பகுதியில் 238 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், குண்டாறு அணைப்பகுதியில் 208 மில்லி மீட்டர் மழைப்பொழியும், செங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் 240 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதியில் 312 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், சங்கரன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் 146 மில்லிமீட்டர் மழை பொழிவும் என ஒட்டுமொத்தமாக அதிகாலை 6 மணி வரை மாவட்டத்தில் சராசரியாக 188 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்