சென்னை, ஜன- 06, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகமானது கைவினைஞர்கள் தயாரிக்கும் கலைப் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் சிறப்பான படைப்புகள் செய்து வரும் கைவினைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விருதுகள் வழங்குவதுடன் பாரம்பரிய கலைத் திறனை பாதுகாக்கும் பொருட்டு இந்நிறுவனம் பல்வேறு பயிற்சி திட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்தி வருகிறது.
இதன் ஒரு அங்கமாக புது டில்லி
கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் மூலமாக தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் ( பூம்புகார் ) நடத்தும் மாநில அளவிலான ” காந்தி சில்ப் பஜார் “என்ற கண்காட்சி சென்னை கிண்டி கத்திப்பாரா நகர்புற சதுக்கத்தில் முதன்மையாக நடைபெற்றது.
இக்கண்காட்சியை கைத்தறி , கைத்திறன் துணிநூல், மற்றும் கதர்த் துறை அரசு செயலர் வி.அமுதவல்லி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் எஸ் . அமிர்தஜோதி , கைவினைப் பொருட்கள் வளர்ச்சித் துறை தெற்கு மண்டல இயக்குநரும் அபிவிருத்தி ஆணையருமான லட்சுமண் ராவ் அத்துகுரி ஆகியோர் முன்னிலையில் சிறு, குறு மற்றும் நடுந்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ .அன்பரசன் துவக்கி வைத்தார்.