ராமநாதபுரம், டிச.24-
சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து இயக்கம்
தங்கள் ஊரின் வழியாக வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மறவாய்குடி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்தது இல்லை.
இவர்கள் முதுகுளத்தூர் அல்லது சிக்கல் ஊருக்கு செல்ல வேண்டுமெனில் ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் நடந்து முதுகுளத்தூர் to சிக்கல் சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் தங்கள் ஊருக்கு பேருந்து வசதி வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் கோரிக்கையை
அமைச்சர் பரிசீலித்து உரிய முயற்சி மேற்கொண்டார். அதன் விளைவாக இன்று முதுகுளத்தூரில் இருந்து மறவாய்குடி சென்று பின்னர் சிக்கல் ஊர் சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம் தொடங்கப்பட்டது.
இதனை ஒட்டி மறவாய்குடி கிராம மக்கள் நீண்ட காலத்திற்கு பின் வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து குலவை போட்டு, பேருந்தின் டயர்களுக்கு எலுமிச்சம் பழம் வைத்து வரவேற்று அந்த பேருந்தில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.