மதுரை மே 25,
மதுரையில் அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியர். மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா மதுரை அரசுப்பொருட்காட்சி – 2024-யை தொடங்கி வைத்து அரசுத்துறை அரங்குகளைப் பார்வையிட்டார்கள்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று இன்றைய தினம் மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி 2024 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 214-வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்கள் 06.07.2024 வரை நடைபெறும்.
இப்பொருட்காட்சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்களான ஆவின், மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அந்தந்த துறைகளின் சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகளை, அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் மாவட்டங்களில் அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொருட்காட்சிகளில், அரசின் திட்டங்களும், சாதனைகளும் சிறந்த முறையில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஈ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம. நகர்ப்புர மக்கள், அரசுத் துறைகளின் திட்டங்களையும், சாதனைகளையும் அறிந்துகொண்டு, தேவையான தகவல்களைப் பெறுவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டுகளித்து, புத்துணர்வு பெறுவதற்கு அரசுப் பொருட்காட்சிகள் வழிவகை செய்கின்றன. அரசுப் பொருட்காட்சிகளில் மாநில அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சிகள், மக்களுக்குப் பொழுதுபோக்காக அமைவதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், நலிந்த கலைஞர்களின் வாழ்க்கை வளம்பெறும் வகையில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் இப்பொருட்காட்சிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொருட்காட்சியின் மூலம் அரசுக்கு வருவாய் என்பது நோக்கமல்ல, அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.