ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம், மதுரை கிளையின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சுற்றுலா, கேரள மாநிலம் மூணாறு காந்தளூர், “சாண்டல் காசா” அரங்கில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பேரா. ஜி. இராமமூர்த்தி சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச் சாராய மரணம் பற்றி கவலை தெரிவித்தார். இதுபோல் தமிழ்நாட்டில் நடக்காதவாறு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார். பேரா. கே. வீ. ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் பேரா. என். பெரியதம்பி, வயது முதிர்ந்த நிலையில் உள்ள பேராசிரியர்கள் ஆர்வத்துடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தன் செயலாளர் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
பேராசிரியர்கள் எஸ். கூடலிங்கம், வள்ளி, சேதுராக்காயி, கோமதி குடும்ப உறுப்பினர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். “இலங்காயத் திராவிட சமயமும், சில கட்டுரைகளும்” என்ற தலைப்பில் பேரா. வி. சுவாமிநாதன் எழுதிய நூலை கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் (ஓய்வு) கே. கூடலிங்கம், ஆர். பாஸ்கரன் வெளியிட, பேரா. மூட்டா. பார்த்தசாரதி பெற்றுக் கொண்டார். பேரா. எஸ். கூடலிங்கம் சமூக சிந்தனையுடன் எழுதப்பட்ட நூலுக்கு மதிப்புரை வழங்கினார். நூலாசிரியர் பேரா. வி. சுவாமிநாதன் ஏற்புரை வழங்கினார். மூத்த பேராசிரியர்கள், தங்கள் வாழ்க்கைத் துணைகள் எவ்வாறு தங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தனர் என்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பேரா. T. K. R. குணவதி வாழ்த்துரை வழங்கினர்.
தீர்மானத்தில் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலத் தலைமை நடத்தவிருக்கும் கடித இயக்கம், தலைநகரில் முழக்கப் போராட்டம், 8- ஆவது ஊதியக்குழு அமைக்கக் கோரி நடைபெறும் அனைத்துப் போராட்டங்களிலும் மதுரை கிளை உறுப்பினர்கள் நிறைந்த எண்ணிக்கையில் பங்கேற்க முடிவு செய்தனர். பேரா. வி.பெருமாள் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், சுப்ரமணி, செந்தில்குமார், சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.