“நிறைந்தது மனம்”நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்பட்ட இலவச போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பயின்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களும், தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்றவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களின் நலனில் அக்கரை கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதில் முக்கியமான திட்டம் நான் முதல்வன் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், அதன் மூலம் புதிய தொழில் முறையை கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
அதேபோல், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் “புதுமைப் பெண்” திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தின் நோக்கமானது பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல், இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்கிறது.
மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறையுடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களும், தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும், பலவித போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகிறது.
வேலைவாய்ப்பு முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த தனியார்துறை நிறுவனங்கள்; தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றனர்;. மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும், உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் அரங்குகள் அமைத்தும் வழிகாட்டப்படுகிறது. தனியார்துறை முகாமில் எட்;டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் வாய்ப்பு அளிக்கப்பட்டுவருகிறது.
அதனடிப்படையில், அரசுத்துறையில் உள்ள பணிக்காலியிடங்கள் போட்டித்தேர்வுகள் வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகின்றன.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு வேலைவாய்ப்பு பெற திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் தொடங்கப்பட்டு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதன்மூலம் கடந்த 3 ஆண்டுகளில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு நடத்தப்பட கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் 827 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் 101 பேர் தேர்ச்சிபெற்று 52 பேர் பல்வேறு அரசு துறைகளில் பணிக்கு சென்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் தனியார்துறை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்துகொண்டு மனுதாரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பற்றோர் இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் நிதியாண்டில் 1020 பொது பதிவுதாரர்களுக்கு ரூ.34,86,600ம், உதவித்தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு 117 நபர்களுக்கு ரூ.93,58,000ம் உதவிதொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 93 வேலையளிப்பவர்களும், 587 மனுதாரர்களும் கலந்து கொண்டனர். இதன் மூலமாக 114 பயனாளிகள் பணிநியமனம் பெற்றுள்ளனர். 2024ஆம் ஆண்டில் மட்டும் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 130 வேலையளிப்பவர்களும் 2354 மனுதாரர்களும் கலந்து கொண்டனர். இதன் மூலமாக 33 பயனாளிகள் பணிநியமனம் பெற்றுள்ளார்கள்.
திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான ஹரிஷ் தெரிவித்ததாவது..
நான் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் வசித்து வருகிறேன். நான் பி.இ., (தகவல் தொழில்நுட்பம்) படித்துள்ளேன். எனது குடும்பம் விவசாய குடும்பம். எனது தந்தை விவசாயி. நான் குடும்பத்தின் முதல் பட்டதாரி. எனது தந்தையின் வருமானத்தினை தவிர வேறு எதுவுமில்லை. விவசாயத்திலிருந்து வரும் வருமானத்திலிருந்து எனது கல்லூரி படிப்பினை முடித்தேன். எனது தந்தையின் மிகப்பெரிய கனவு நான் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் சேர வேண்டும் என்பதே. இதற்கான வேலைவாய்ப்பினை பெற சென்னை செல்ல வேண்டும் என நினைத்திருந்த நிலையில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் நான் பங்கேற்று எனது திறமையின் அடிப்படையில் புகழ்பெற்ற தனியார்துறையில் பணிக்கிடைத்தது. எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். இதுபோன்ற கிராமப்புற படித்த இளைஞர்களுக்கு இவ்வாய்ப்புகளை எளிதாக ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர் தெரிவித்ததாவது..
எனது பெயர் வினோத். நான் திருவாரூர் மாவட்டம், விளமல் பகுதியில் வசித்து வருகிறேன். நான் பி.சி.ஏ., கல்லூரி படிப்பு முடித்துள்ளேன். கல்லூரி வகுப்பு முடித்த குறுகிய காலத்திலேயே எனது தாய், தந்தை இறந்து விட்டனர். எனது தந்தைக்கு நான் அரசு வேலைக்கு செல்லுவதை குறிக்கோளாக இருந்தது, அவரது குறிக்கோளை எனது இலட்சியமாக கொண்டு பயணித்தேன். இருப்பினும், எந்தவொரு தனியார் நடத்தும் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் என்னால் சென்று படிக்க இயலவில்லை. அந்த சமயத்தில் குரூப்-4 தேர்விற்கான தேதி அறிவிப்பு வெளிவந்ததது. அச்சமயத்தில் நூலகத்தில் தினசரி செய்தி நாளிதழில் வெளிவரப்பெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படவுள்ளது என பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டிருந்ததை பார்த்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பயிற்சிக்கு சென்றேன். அங்கு அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்பின் மூலம் சீரிய முயற்சியுடன் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு முதலமைச்சர்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு
மீ.செல்வகுமார், பி.காம்., பி.எல்.,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்புஅலுவலகம்,
திருவாரூர் மாவட்டம்.