கிருஷ்ணகிரி. ஆக: 28
கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு 20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மிலாடி நபி விழா குழு தலைவரும் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அஸ்லம் ரஹ்மான் ஷெரிப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் மற்றும் மிலாடி நபி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தொடர்ந்து 15 ஆவது ஆண்டாக நபிகள் நாயகம் பிறந்த நாள் மற்றும் மிலாடி நபி விழாவை முன்னிட்டு 20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்யப்படவுள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் 22ம் தேதி கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள மசூதியில் திருமணம் நடைபெற்று கார்னேசன் திடல் பகுதியில் விருந்து நடைபெற உள்ளது. இந்த இலவச திருமண நிகழ்ச்சியில் கலந்து மணப்பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் 9677438428 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் 20 ஜோடிகளுக்கும் வெள்ளி உள்ளிட்ட 30 வகையான பல்வேறு சீர்வரிசைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து பிரியாணி விருந்தும் நடைபெறுகிறது. எனவே அனைவரும் இந்த இலவச திருமண விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அஸ்லம் ரஹ்மான் ஷெரிப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.