திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியின் உள்வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹச்.புருசோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் பெனெட்டிக் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மேஜர் டோனர்
ஜி.சுந்தரராஜன், திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளிகள் அதிபர் அருள்பணி ஆர். மரிவளன் எஸ்ஜே, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் எம். செல்வகனி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார்கள். இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் முகாம் தினத்தன்றே மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இதில்
அறுவை சிகிச்சைக்குத் 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்ளுக்கு மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, உள்விழி லென்ஸ் (IOL) உணவு, தங்குமிடம், போக்குவரத்துச் செலவு அனைத்தும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், அறிவிக்கப்பட்ட நாளில் முகாம் நடந்த இடத்திலேயே செய்யப்படும் மறு பரிசோதனைக்குத் தவறாமல் வர வேண்டும் எனவும்,
அறுவை சிகிச்சைக்கென முகாமிற்கு வரும் இருதயநோய், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்,
ஆஸ்துமா உள்ள நோயாளிகள் முன்னரே மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று அவர்கள் தற்போது சாப்பிடும் மருந்து, மாத்திரைகளைக் கையோடு கொண்டு வர வேண்டும் எனவும், இலவச கண் மருத்துவ முகாமிற்கு வரும் பயனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்ணைத் தவறாமல் கொண்டு வர வேண்டும் எனவும், மேலும் கண்புரை நோயால் கண் பார்வை இழந்தவர்களுக்கு கண்ணில் விழிலென்ஸ் (IOL) பொருத்தி மீண்டும் பார்வை வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமில் பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர்
பி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.