அரியலூர், ஆக:10
அரியலூர் மாவட்ட நகரில் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 129 மாணவர்கள், 49 மாணவிகளுக்கும், அரியலூர் நிர்மலா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 430 மாணவிகளுக்கும், அரியலூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 81 மாணவர்கள், 16 மாணவிகள் என மொத்தம் 210 மாணவர்கள், 495 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியை கிடைக்கச் செய்து அவர்களது வாழ்வை முன்னேற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொருளாதார சூழ்நிலையால் அவர்களது கல்வி எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2024-25ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3,102 மாணவர்கள், 3,377 மாணவியர்கள் என மொத்தம் 6,479 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 3.13 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) திரு.சுவாமி முத்தழகன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் உமா மகேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயபாஸ்கர், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) நேசபிரபா, மாவட்ட கல்வி அலுவலர்(தனியார்பள்ளிகள்) (பொ) செல்வவிநாயகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், நேர்முக உதவியாளர் (மேல்நிலை) முதன்மை கல்வி அலுவலகம் பன்னீர் செல்வம், பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவிதா மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.