நாகர்கோவில் மார்ச் 13
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு திரைப்படம் போடுவதாக கூறி மாணவர்களிடமிருந்து தலா 10 ரூபாய் என்று வசூல் செய்து பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா கையெழுத்தை போலியாக பயன்படுத்தியும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியின் அரசு முத்திரை மற்றும் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி அனைத்து பள்ளிகளிலும் “மாணவர்களே மரம் வளர்ப்போம்” என்ற திரைப்படம் திரையிட போவதாக பெரும் அளவில் வசூலில் ஈடுபட்டு மிகப்பெரிய மோசடியைை துணிந்து அரங்கேற்றம் செய்த குற்றவாளிகள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அவரின் உத்தரவைத் தொடர்ந்து ஆய்வாளர் அன்பு பிரகாஷ், உதவி ஆய்வாளர் சதீஷ், மற்றும் காவலர்கள் அடங்கிய குழு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஒரு புகைப்பட ஆதாரத்தை வைத்து விசாரணை நடத்தியதில் இதில் சம்பந்தப்பட்ட நபர் ஒரு மாற்றுத்திறனாளி என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் என் ஜி ஓ காலனி பகுதியில் குடியிருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அவரை கைது செய்ய சென்ற போது அவர் அங்கிருந்து தலைமறைவாகி இருந்தார். எனவே போலீசார் அவர் எங்கு சென்றார் எங்கு உள்ளார் என தீவிர விசாரணையில் முன்பை விட அதிவேகமாக செயல்பட தொடங்கி சுமார் ஆறு நாட்களாக கோயம்புத்தூர், ஈரோடு, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் மதுரை பகுதியில் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்து நேற்று அவரை கைது செய்து நேசமணி நகர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேலும் அவரிடம் மாவட்ட ஆட்சியரின் போலியான கையெழுத்துடன் கூடிய லெட்டரை தயார் செய்து பத்து ரூபாய் முறை கேட்டில் யார் யார்? சம்பந்தப்பட்டுள்ளனர் , எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது. போலியான ஆவணம் மற்றும் சீல் எங்கு தயார் செய்யப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல நாட்கள் மர்மமாக இருந்து வந்த ஆட்சியரின் போலி கையெழுத்து மற்றும் பத்து ரூபாய் பள்ளி கொள்ளை வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. எனவே இதில் தொடர்புடைய பசுந்தோல் போர்த்திய புலிகள் விரைவில் வெளிச்சத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.