நாகர்கோவில் ஏப் 19
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் கார்த்திகேயன்(23) குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்த அருண் என்பவரின் மகன் அஜிஸ்(24) சுசீந்திரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ஜெயமாருதி(29) குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சஞ்ஜுவ் பாபு (28)பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விற்பனை செய்ய வைத்திருந்த 500 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் இந்த மாதத்தில் மட்டும் 17 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு,32 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3.383 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.