நாகர்கோவில் ஜூன் 29
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மலையோர கிராமங்களில் தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருந்து வந்தது . தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணிகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தாலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து 4,048 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை சப்பாத்தி பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் அருவியில் குளிப்பதற்கு நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முக்கடல் மாம்பழத்துறை ஆறு அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருவதால் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அணைக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 44.85 அடியாக இருந்தது. அணைக்கு 2,237 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 632 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,048 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 1,059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.79 அடியாக உள்ளது. அணைக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.