ராமநாதபுரம், டிச.4-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பொருட்கள் பார்சல் வழங்கும் போது நெகிழி வகைகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவு கடைகள், தேநீர் கடைகள் மற்றும் சாலையோர தள்ளு வண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக சூடான உணவு வகைகளை அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி வகைகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது.
உணவு வணிகர்கள் சூடான உணவு வகைகளை வாழை இலையில் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும். சூடான உணவுப் பொருட்களை தடை செய்யப்பட்ட நெகிழி வகைகளில் வாங்கி பயன்படுத்துவதினால் உடல்நிலை குறைபாடுகள் ஏற்படுவதுடன் உணவு பாதுகாப்பு சட்டம்,2006 மற்றும் விதிகளுக்கு புறம்பான செயலாக கருதப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் தாங்கள் உணவு வகைகளை பார்சல் வாங்க வரும்பொழுது சில்வர் பாத்திரம் கொண்டு வந்து வாங்க முன்வர வேண்டும்.
மேலும் சூடான சாம்பார் , டீ , காபி போன்ற உணவு வகைகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட உணவு கலன்களில் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே நெகிழி வகைகள் பயன் படுத்துவதற்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது .
அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி வகைகளின் பயன்பாடு மற்றும் விற்பனை கடைகளில் இருந்தால் முதல் முறை குற்றத்திற்காக ரூ 2000, இரண்டாம் முறை ரூ- 5000 மற்றும் மூன்றாம் முறை ரூ. 10000 அபராததுடன் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடை சீல் வைக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.