ராமநாதபுரம், ஏப்.3-
ராமநாதபுரம் வழிவிடும் முருகன் திருக்கோயில் 85 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு விக்னேஸ்வரர் பூஜையுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.
ராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் வழிவிடும் முருகன் கோயில் பங்குனி உத்தரப் பெருவிழா கோலாகலமாக நடைபெறும். 85 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா கோயிலில் மீனம் லக்னத்தில் விக்னேஸ்வர பூஜை திருமஞ்சன அபிஷேகம் ரக்ஷா பந்தனம் துவஜாரோகணம் நடைபெற்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் எழும்ப கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்தரப் பெருவிழா ஏப்.11 ம் தேதி வெள்ளிக்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதி உத்திரம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் நொச்சி வயல் ஊரணி கரையில் உள்ள ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் அடைந்து காலை 10. 25 மணிக்கு மிதுனம் லக்னத்தில் பால்குடம் பால்காவடி கட்டி சுவாமி புறப்பட்டு ஆலயம் வந்து சேரும் நிகழ்ச்சி பக்தர்களின் அரோகரா கோசம் விண்ணை முட்டும் அளவுக்கு வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அன்று பகல் 12 மணிக்கு முருகனுக்கு கடக லக்கனத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்காவடி, மயில் காவடி, பால்குடம், பறவை காவடி வேல் குத்துதல், அலகு குத்தி தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக் கடன் செய்ய உள்ளனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இரவு 7 மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் முழுவதும் பல்வேறு சங்கங்கள் அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் ஒவ்வொரு நாளும் பக்தி இன்னிசை கச்சேரிகள், சொற்பொழிவுகள், பக்தி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழா ஏற்பாடுகளை வழி விடு முருகன் கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஜெயக்குமார் செய்து வருகிறார்.