நாகர்கோவில் ஜன 3
இன்று நடைபெறும் டிசம்பர் 2024 மாதத்திற்கான மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை வழங்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு டிசம்பர் 2024 மாதத்திற்கான மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் /தேவைகள் அடங்கிய மனுக்களை இன்று நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். இன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.