அரியலூர், டிச;20
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அவ்வட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் தம் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் 18 ,19 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் செந்துறை வட்டம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி செந்துறை வட்டம், செந்துறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை பார்வையிட்டு இருப்பில் உள்ள சிறுதானிய நுண்சத்து, தென்னை நுண்சத்து, உள்ளிட்டவைகள் குறித்தும் அவைகளின் எடை மற்றும் காலவதியாகும் நாள் குறித்தும், இடுபொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்து வேளாண்மைத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விவசாய இடுபொருட்கள், வேளாண் உபரகணங்களையும், மாவட்ட அளவில் மக்காச்சோளம் விளைச்சலில் அதிக உற்பத்தியை அடைந்த விவசாயிகளுக்கு பரிசுத் தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
பின்னர், செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்டுள்ள கடன்கள் விபரம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் விபரங்கள், வைப்புத் தொகை விபரம் ஆகியவற்றை கேட்டறிந்து, கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செந்துறை சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடியினை பார்வையிட்டு இருப்பில் உள்ள பொருட்களின் விவரம் மற்றும் தரம், மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு சாதனங்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்து, பொதுமக்களுக்கு தாமதமின்றி பொருட்களை விநியோகம் செய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினை பார்வையிட்டு தீயணைப்பு, மீட்புப்பணிகளில் பயன்படுத்தப்படும் சிறப்பு உபகரணங்களின் செயல்பாடுகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தின் பயன்பாட்டில் உள்ள ஊர்திகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, அவசரகால தொலைபேசி எண்களின் இயங்கு நிலை உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தீயணைப்பு பணியாளர்கள் எந்த நேரமும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நல்லாம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு வருகைபுரிந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் எடை, அளவு மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து விவரம் குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர், நல்லாம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தினைப் பார்வையிட்டு ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளின் எண்ணிக்கை, ஏரி மற்றும் குளங்களின் விவரம், பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் விவரம், சுகாதார பணிகள், அலுவலக பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து கேட்டறிந்து பருவமழையின் காரணமாக நீர் நிரம்பியுள்ள ஏரிகள் மற்றும் குளங்களை தொடர்ந்து கண்காணித்திடவும், குழந்தைகள் ஏரிகள் மற்றும் குளங்களின் அருகே செல்லாமல் இருக்க கிராம ஊராட்சியின் அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்;.
பின்னர், நல்லாம்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தயார் செய்யப்படும் சமையல் கூடத்தினைப் பார்வையிட்டு பொருட்களின் இருப்பு, காலவதியாகும் நாள், மாணவர்களின் எண்ணிக்கை, உணவின் தரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு தொடர்ந்து சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் நல்லாம்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதல் செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிலை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிலை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்த ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான 146 மனுக்கள் பெறப்பட்டது.
இரண்டாம் நாள் ஆய்வில் செந்துறை முதல் நிலை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் பேருந்து நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவட்ட ஆட்சியர் எத்தனை பணியாளர்கள் பணிபுரிகின்றனர் என்று கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து செந்துறை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் மாணவர் விடுதியில் மாணவர்களிடம் உணவு நன்றாக உள்ளதா கேட்டறிந்தார், உணவு, தங்குமிடம், உணவு தயாரிக்கும் சமையல் கூட ஆய்வு மேற்கொண்டார்.
செந்துறை பால் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கள ஆய்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மாவட்ட நிலை அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர் வேலுமணி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாகிர் உசேன் மற்றும் பிரபாகரன், மருத்துவர்கள், காவல் துறை அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள், செந்துறை முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் உள்ளிட்ட உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்