கன்னியாகுமரி அக் 18
கன்னியாகுமரி மாவட்டம். விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட குழித்துறை. மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை நேற்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலாக சுமார் 4520 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 24,000 பேர் பயன்பெறுவார்கள். எனவே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை முழு சுகாதாரத்தன்மையுடனும், நோய்த்தடுப்பு மருந்து தெளித்து வழங்கிட ஆணையர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மார்த்தாண்டம் திருவட்டார் சாலையின் அருகாமையில் அமைந்துள்ள உரக்கிடங்கினை ஆய்வு மேற்கொண்டு, மக்கும் குப்பை மற்றும் மட்கா குப்பைகள் என தரம் பிரித்து உரம் தயாரித்து, உற்பத்தி செய்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14.6 கோடி மதிப்பில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நவீன காய்கறி சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகளை தரமானதாகவும் விரைந்து முடித்திட ஆணையர், செயற்பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீர் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து அப்பழுதினை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட தேசிய நெடுஞ்சாலைதுறை. மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பழுதடைந்த சாலையை சீரமைத்து கனரக வாகனங்கள் தவிர பேருந்துகள். நான்கு சக்கர வாகனங்கள். இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, குழித்துறை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன், விளவங்கோடு வட்டாட்சியர் ஜூலியன் ஹீவர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.