நாகர்கோவில் மார்ச் 25
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் வாரந்தோறும் திங்கள் கிழமை மனு நாள் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வருகை தருவது வழக்கம். ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆவது போன்ற செயல்களால் மனவிரக்தி அடைந்து சிலர் அவ்வப்போது தீக்குளிப்புக்கு முயற்சிப்பது, தரையில் அமர்ந்து போராடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு பேரில் தினசரி இரண்டு மூன்று காவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாக திங்கள் கிழமை மனு நாள் என்பதால் மனு வழங்க வரும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்
நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் தலைமை காவலர் பிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தவர்கள் பைகளை சோதனையிட்டு, தண்ணீர் பாட்டில்களை பரிசோதித்த பின்னர் மனு வழங்க அனுமதித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் எளிதில் தீப்பற்றும் பொருள்களைக் கொண்டுவந்து தீக்குளிக்க முயற்சிப்பது அருகில் உள்ளவர்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு ஏற்படுத்தகூடிய வகையில் உள்ளது. மேலும், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களால் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வரும் பொது மக்கள், அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களிடையே உயிர் பயமும், பீதியும் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்கள் சொந்த பிரச்னைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தாலோ, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.