கருங்கல், பிப்- 2
கருங்கல் அருகே உள்ள இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (77).தொழிலாளி. இவரது மகன் ஜெய்சிங் (39). திருமணமாகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஏசுதாஸிற்கும் ஜெய்சிங்கிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடைபெறுவது வழக்கமாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம், வீட்டின் வெளியே உள்ள ஒரு மரத்தில் ஏசுதாஸ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கிலிருந்து இறக்கி பரிசோதித்த போது அவர் இறந்து விட்டார். பின்னர் மகன் ஜெய்சிங் என்ன ஆனார் என்று பார்த்தபோது அவர் வீட்டில் அறையில் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து கருங்கல் போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேருடைய உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசின் முதற்கட்ட விசாரணையில் மகன் ஜெய்சிங் தூக்கு போட்டதை பார்த்த தந்தை ஏசுதாஸும் தூக்கிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.