நாகர்கோவில் நவ 23
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆர்,அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இன்றைய சூழலில் பாரம்பரிய நெல் இரகங்களின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வேளாண் ஆராய்ச்சியாளரால் விவசாயிகளுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 186 மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் நீர்வளத்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. தோவாளை சானல் உடைப்பினால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் பயிர் இழப்பீடு கணக்கிடும்போது கிராம வாரியாக கணக்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள். இது தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
குளங்களில் மீன் வளர்ப்பது மற்றும் கழிவுகளை கொட்டி குளங்களை மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மாவட்டத்தில் ஏதேனும் 3 குளங்களில் நீர் மாதிரி எடுத்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் செய்யப்படும் பரிசோதனை முடிவுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
வனவிலங்குகளால் பயிர் மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க மாவட்ட வன அலுவலர் மூலம் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இரண்டு வருவாய் கோட்டங்களிலும் மாதந்தோறும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடர்பான கூட்டம் இடைவெளியின்றி தவறாமல் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை கண்காணித்து அதனை தடுப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மாவட்ட நகர்ப்புற ஊரமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் அரங்கினை பார்வையிட்டார்கள். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் ஜேக் மிஷன் திட்டத்தின் கீழ் வியட்நாம் சூப்பர் எர்லி மற்றும் டேங்சூரியா பலா வகைகளின் ஒட்டுவகை தொகுப்பினை 2 பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா. நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.