நாகர்கோவில் ஆக 24
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் நீர்வளத்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்து தெரிவித்தார். வேளாண்மை மற்றும் சகோதர துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. கடந்த ஜூலை 2024 மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 193 மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
தோவாளை சானலில் தூவாச்சி பகுதியில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் கடைவரம்பு வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்துறை மற்றும் நீர்பாசன சங்க நிர்வாகிகள் இணைந்து பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு பாசன நீர் விநியோகம் மற்றும் பரிந்துரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோட்ட அளவில் மாதந்தோறும் மாவட்ட அளவில் காலாண்டு தோறும் நடத்தப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் வேண்டுகோளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்தினார்.
விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றம் செய்வதில் அரசு விதி முறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து நில அளவை செய்யும்போது சம்பந்தப்பட்ட மனுதாரர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டதால் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகள் குறித்து படிவம் III வழங்கப்பட்ட பகுதிகளில் விரைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார பூச்செடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
நடைபெற்ற கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன். மரு.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி. அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.