சிவகங்கை: மார்ச்:01
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு, நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படுகிறது.
குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கண்மாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளவும்,
விவசாய நிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடவும், விவசாய பணிகளுக்கென இயந்திரங்கள் வழங்கிடவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகளிடமிருந்து கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக புகார் பெறப்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும்,விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து உழவு செய்வதற்கு மானியம் வழங்கிடவும், நமது மாவட்டத்தில் இயற்கை முறையில் இடுபொருட்கள் உற்பத்தி செய்வதற்கு குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் பயிற்சி வழங்கி, இடுபொருள் உற்பத்தி செய்வதற்கு மானியம் வழங்கிடவும், தோட்டக்கலைப் பண்ணையில் தங்களுக்கு தேவையான மண்புழு உரம் வழங்கிடவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், பயிர் காப்பீடு தொகை வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுதவிக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும், குறிப்பாக இக்கூட்டத்தின் வாயிலாக விவசாயிகள் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் உரிய விபரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், பரிசீலனையிலுள்ள கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காணும் பொருட்டு, உரிய களஆய்வுகளும் மேற்கொண்டு, அந்நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை முன்னிட்டு, துறை ரீதியாக அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள், மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கா.வானதி இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலெட்சமி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முதன்மை அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.