போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திப்பனூர் ஏரி சுமார் 59 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு பாரூர் ஏரியிலிருந்து வருடந்தோரும் தண்ணீர் வருவது வழக்கம். நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 8ம் தேதி வழங்கினார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திப்பனூர் ஏரிக்கு அனுமதி அளிக்கப்படாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். சற்றும் ஆழமில்லாத திப்பனூர் ஏரி மண் அள்ளப்பட்டால் ஆழம் அதிகமாகி தண்ணீரை சேமிக்க முடியும் என்பதால் இந்த ஆணைக்காக காத்திருந்த நிலையில் திப்பனூர் ஏரியை மட்டும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் விட்டுள்ளனர் என ஆதங்கப்படுகின்றனர். இதனால் திப்பனூர் ஏரிக்கு மண் அள்ள அனுமதி வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர். தவறும்பட்சத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் அவர்களிடம் கேட்டபோது, கெட்ஜட்டில் ஏரியின் பெயர் இடம்பெறவில்லை, அதனால் மண்ண அள்ள முடியாது என தெரிவித்தார்.