நாகர்கோவில் அக் 7
குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்டச் செயலாளர் அல்காலித் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரை முடக்க போலீசார் முயற்சி செய்வதாக அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் அல்காலித். எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிரச்னை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுப்பதிலும் அல்காலித் முன்வரிசையில் நிற்பவர். எங்கள் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்திலும் அமைப்பாளராக உள்ளார்.
எளிய மக்களுக்கு இன்னல் என்றால் சமரசமின்றி போராட்டங்களின் வழியாகவும், உரிய அரசு அதிகாரிகளை அணுகியும் நியாயமான பிரச்னைகளுக்கு தீர்வும் காண்பவர். அரசியல் ரீதியாகவும் அல்காலித் குறிப்பிடத்தக்க பணிகளை முன்னெடுத்து செய்தவர். இந்நிலையில் காவல் துறையினர் எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் அல்காலித்தை ஒடுக்குவதன் மூலம் குரலற்றவர்களின் குரலை ஒடுக்க முயல்வதாகத் தெரிகிறது. அதன் ஒரு கட்டமாக அல்காலித் மீது நேசமணிநகர் போலீசார் பொய் வழக்கு பதிந்துள்ளனர். அல் காலித்தை செயல்படாமல் முடக்க வேண்டும் என்பதில் சில காவலர்களுக்கு இருக்கும் ஆர்வம் இந்த பொய் வழக்கில் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.
திராவிட மாடல், சமூக நீதி என சீர்மிகு ஆட்சியை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது ஆட்சியில் கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர் மீதே எவ்வித விசாரணையும் இன்றி வழக்குப் பதிவு செய்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
பாசிச பாஜகவுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் உரிமைகள் மறுக்கப்பட்ட தருணத்திலும் களமாடிய அல்காலித், காவல் துறையே தவறு செய்தாலும் சுட்டிக் காட்டியவர். இதற்கெல்லாம் பழி வாங்கவே இந்த வழக்கு போடப்பட்டிருக்கலாமோ என்னும் சந்தேகமும் ஓட்டு மொத்த மக்களுக்கும் எழுகிறது. இதை விளக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கே இந்த நிலையா என்னும் கேள்வியும் இதன் பின்னால் எழுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.