மதுரையில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டு இருக்கிறது இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்றிலிருந்து பனையூர் வாய்க்கால் வழியாக தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மாநகர் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தது. சுரங்கப்பாதைகள், சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் மாநகராட்சி பணியாளர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் செல்லும் உபரிநீர் பனையூர் வாய்க்கால் வழியாக தெப்பக்குளத்திற்கு சென்று அடைகிறது. தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்று நீர் சென்று அடையும் வழிகளான வைகை தென்கரை ஜீரோ பாயிண்ட், புது ராம்நாட் ரோடு பகுதி வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்று அடையும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வைகை வடகரை ஆழ்வார்புரம் (தேனி ஆனந்தம் அருகில்) பந்தல்குடி வாய்க்காலில் இருந்து வைகை ஆற்றில் கலக்கும் நீர் வழித்தடத்தையும் மற்றும் கனமழையின் காரணமாக வைகை ஆற்றின் நீர்வரத்து குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ். கண்காணிப்பு அலுவலர் முகம்மது சபியுல்லா, செயற் பொறியாளர்கள் சுந்தரராஜன், சேகர். உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவிப்பொறியாளர் சந்தனம், சுகாதார அலுவலர் கோபால், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.