ஊட்டி. பிப். 27.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காய்கறி உற்பத்திக்கு அடுத்ததாக யூகலிப்டஸ் தைல உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாகும் . யூகலிப்டஸ் இலைகளை கொண்டு நீலகிரி தைலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எரிபொருள் தேவைக்காக யூகலிப்டஸ் மரங்கள் நட்டு வைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் நீலகிரியில் உள்ள 50 சதவீதத்துக்கு மேற்பட்ட புல்வெளிகளை அழித்து கற்பூர மரங்களை நடவு செய்தனர். அன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் நீர் நிறைந்த சதுப்பு நிலப் பகுதிகளாக காணப்பட்டது. இதனால் யூகலிப்டஸ் எனப்படும் கற்பூர மரங்கள் சறுப்பு நிலப்பகுதிகளில் அதிக அளவு நடவு செய்யப்பட்டது. இந்த கற்பூர மரங்கள் நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுமார் 11,000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலையில் இருந்து காட்சி எடுக்கும் தைலம் தலைவலி, ஜலதோஷம் மற்றும் உடல் வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.
நீலகிரி தைலம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த தைலம் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. கடந்த காலங்களில் 400 க்கு மேற்பட்ட தைலம் தயாரிக்கும் கொட்டகைகள் இருந்தன. இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வெயில் காலங்களில் உலர்த்தப்பட்ட 100 கிலோ கற்பூர இலைகளில் இருந்து ஒரு லிட்டர் வரை தைலம் தயாரிக்க முடியும் இதே மழை காலங்களில் 500 கிலோ இலைகளுக்கு சுமார் 3 லிட்டர் அளவிற்கு மட்டும்தான் தைலம் தயாரிக்க முடியும்.
தற்போது இந்த மரங்கள் அதிக அளவு நீரை உறிஞ்சி கொள்வதாலும் இந்த மரங்கள் உள்ள இடத்தில் வேறு எந்த தாவரங்களும் வளர வாய்ப்பில்லை என்பதாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இம்மரங்கள் வனத்துறைமூலம் அழிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை.