20 நிறுவனங்கள் 650 இளைஞர்கள் பங்கேற்பு
ராமநாதபுரம், நவ.10-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடைபெற்ற இந்த இளைஞர் திறன் திருவிழாவில் திட்ட இயக்குனர் சித்ரா தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் சத்யா, அழகப்பன், தங்கபாண்டியன், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலக கமிஷனர் செந்தாமரை, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தவல்லி, அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகம்மது சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் திறன் திருவிழாவில் 20 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 650 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற 170 இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
மாவட்ட திட்ட இயக்குனர் சித்ரா கூறும் போது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் பல்வேறு அரசு துறையின் கீழ் தீன் தயாள் உபத்தியாய கிராமின் கவுசல் யோஜனா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் பல்வேறு பயிற்சிகள் ஊக்கத் தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி காலம் மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சம் ஆறு மாதம் வரை நடைபெறும். தற்போது இதில் பலர் பங்கேற்று பயிற்சி பெற்று இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதற்காக பணி ஆணை பெற்று சென்றுள்ளனர். இதுபோன்ற நல்லதொரு வாய்ப்பை ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.