நாகர்கோவில் மார்ச் 6
குமரி மாவட்டத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மூவர், 2011ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றனர். 35 ஆண்டுகள் பணியாற்றிய அவர்கள், தங்களைப் பணிவரன் முறை செய்து ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று கூறி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, 12 வாரங்களுக்குள் ஓய்வூதிய பணப்பலன் வழங்கும்படி கன்னியாகுமரி மாவட்ட சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,வுக்கு உத்திரவிட்டார்.இந்த உத்தரவு பிறப்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணப்பலன்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் மூவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஓய்வூதிய பணப்பலன் தர உத்தரவிட்டு 2 ஆண்டாகியும் நிறைவேற்றாதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காத கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் மோகன் ஆகியோருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இருவருக்கும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இருவரும் ஐகோர்ட் பதிவாளர் முன்னிலையில் சரண் அடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது.