அரியலூர், ஜூலை:13
வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு கல்வியே சிறந்த ஆயுதம் என்றார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன்.
அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் புதியதாக சேர்ந்த குழந்தைகளுக்கு வரவேற்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் பேசுகையில், தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் கற்ற கல்வியின் பயன் கிடைக்கும். இல்லாவிடில் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாக கூறியிருக்கிறார். எனவே கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்க்காக உதவும் கருவியாகும்.
அறிவியலும், சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும்.
கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும்.
எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொருத்த வரை மிகவும் தாழ்வாகவும் இழிவாகவும் கருதப்படும் என்றார். பின்னர் அவர், புதிய மாணவ,மாணவிகளுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
இவ்விழாவுக்கு குழந்தைகள் நல குழுத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
வள்ளலார் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் பெ.சௌந்தரராஜன் பேசுகையில், கல்வி ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல நிலையை பெற்று தரும். அத்தகைய கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக வள்ளலார் கல்வி நிலைய செயலர் கொ. வி. புகழேந்தி வரவேற்றார். முடிவில் திருவள்ளுவர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், விடுதி பணியாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்