கிருஷ்ணகிரி- ஜூன்-20 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரிலும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரின் அறிவுரைகளின்படியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்ட அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி 18.06.2024 மாலை 3.00 மணியளவில் தனி வட்டாட்சியர் பறக்கும் படை .எம்.சின்னசாமி மற்றும் பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் .துரைமுருகன் ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் மேலுமலை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி வந்த T.N. 37.A. 9727 என்ற பதிவெண் கொண்ட 407 மினி லாரி என்ற வானத்தை நிறுத்தி சோதனை செய்ததில் வானத்தின் பின்புறமாக பிளாஷ்டிக் டப்பாக்கள் அடங்கிய மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் சந்தேகத்தின் பேரில் பிளாஸ்டிக் டப்பாக்கள் அடங்கிய மூட்டைகளை வெளியே எடுத்து லாரியின் உட்புறமாக சோதனை செய்ததில் 110 பிளாஸ்டிக் மூட்டைகளில் பொதுவிநியோக திட்ட பச்சரிசி இருந்தது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை விசாரணை செய்ததில் தனது பெயர் திரு.டெல்லி த/பெ. ரவி வயது:30) எனவும் தனது ஊர் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் லெனின் நகர் எனவும், மேற்படி வாகனத்தில் உள்ளது ரேசன் அரிசி எனவும் இதனை கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் மூலம் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோக திட்ட அரிசியை கள்ளத்தனமாக கடத்தி செல்வது சட்டப்படி குற்றம் என்பதால் மேற்படி 110 பிளாஸ்டிக் மூட்டைகள் கொண்ட ரேசன் அரிசியை கைப்பற்றுகை செய்து எடையிட்டதில் மொத்தம் 5,500 கிலோ 5.50 டன் இருந்தது. மேற்படி கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தும் மற்றும் T.N. 37.A. 9727 என்ற 407 மினி லாரி நான்கு சக்கர வாகனத்தையும், வாகன ஓட்டுநர் திரு.டெல்லி த/பெ. ரவி என்பவரையும். குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.