குளச்சல், நவ- 23
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இரும்பிலி சந்திப்பு மிகவும் போக்குவரத்து நெருக்கடியான பகுதியாகும். இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக ஒரு சொகுசு கார் நீண்ட நேரம் நின்றது. இதை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் காரில் சென்று பார்த்த போது, முன் இருக்கையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் போதையில் படுத்து கிடப்பது தெரிய வந்தது.
அவரால் காரை ஓட்ட முடியவில்லை. உடனே பொதுமக்கள் குளச்சல் போக்குவரத்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதையில் மட்டையான ஆசாமியை எழுப்ப முடியாமல் தவித்தனர்.
இதை அடுத்து போதை ஆசாமியையும் காரையும் மீட்டு குளச்சல் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்றனர். அப்போது போதை ஆசாமி போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு வழியாக போதை ஆசாமியை சமாதான செய்த போலீசார், ஆட்டோவில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கார் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.