தென் தாமரைகுளம்,ஜன.27-
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில்;
தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடும் இரும்புசார் தொழில்நுட்பங்களும் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆய்வு முடிவுகள் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. அதை தமிழ்நாடு முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இது மிக காலதாமதமான அறிவிப்பெனினும் இப்போதாவது அது நடந்திருப்பது மிகுந்த மகிழ்வை தருகிறது.உலகின் பல நாகரிகங்கள் இரும்பை பற்றி அறியாத காலகட்டத்திலேயே தமிழ் பேரினம் இரும்பை உருக்கி ஆயுதங்களும் கருவிகளும் செய்யுமளவிற்கு தொழில்நுட்ப அறிவுடன் வாழ்ந்திருக்கிறது.
இந்த கருத்தை பல ஆண்டுகளாக தமிழ் அறிவுத் தளத்தில் தொடர்ந்து பேசுபொருளாக வைத்திருந்த சகோதரர் ,மன்னர் ,மன்னன் உட்பட தமிழ் அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும், தமிழ்தேசிய செயல்பாட்டாளர்களுக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த காலங்களில் தமிழர்களின் இரும்பு தொழில்நுட்பத்தின் தொன்மையை பற்றி தமிழ் உணர்வார்கள் பேசும்போதெல்லாம் அவர்களை அறிவுக்கேலி செய்து எள்ளி நகையாடிய திராவிடவாதிகள் இப்போது வேறுவழியின்றி தமிழ் பெருமை பேசும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து தமிழ் நாகரிகம், தொன்மை குறித்தான தொல்லியல் ஆய்வுகள் மந்த நிலையிலேயே நடப்பதும், நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படாமல் மூடி மறைக்கப்பட்ட நிலையிலும் இருந்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்த ஆய்வுமுடிவிற்கு பின்னாவது ஒன்றிய அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கான நிதியை முடக்காமல் தரவேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு முடங்கி கிடக்கும் ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி முடிக்கவேண்டும் .ஆய்வு முடிவுகள் உடனுக்குடன் தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும்.
இதுவரை தமிழரின் தொன்மையையும் வரலாற்றையும் பேசும்போதெல்லாம் அதை திராவிட நாகரிகமென மடைமாற்றி திரிக்கும் செயல் , சமீபத்திய அறிவிப்பின் போது நிகழ்த்தப்படவில்லை . இதற்கு ஒரே காரணம் தமிழ்நாடு அரசியல் தளத்திலும் ,அறிவுத்தளத்திலும் தமிழ் தேசிய அரசியல் கருத்துகளை வலிமையாக முன்னிறுத்தி சீமானும் நாம் தமிழர் கட்சியும், தமிழ்தேசியவாதிகளும் நிகழ்த்திய புரட்சியே காரணம் என்பதை மறுக்க முடியாது.
இனி தமிழ் தேசிய அரசியலை புறம் தள்ளிவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய இயலாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடு தான் இது. இனி தமிழின் பெருமைகளுக்கு திராவிட சாயம் பூசும் காலாவதியான உத்திகள் தமிழர்களிடையே எடுபடாது.
இந்த அறிவிப்பு உலகத்தமிழர்களின் பெருமிதம் ,இந்த அறிவிப்பு தமிழ்தேசிய அரசியலின் வெற்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.