நாகர்கோவில் ஜூலை 26
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோவாளை சாணல் விவசாயிகள் பயிர் காப்பீட்டு (இன்சூரன்ஸ்) செய்வதற்கு காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் தொகை கட்ட இயலாத விவசாயிகளுக்கு இதற்குரிய கட்டணத்தை செலுத்தி உதவிட தயாராக இருக்கிறேன். இதனை இன்சூரன்ஸ் கட்ட இயலாத விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோவாளை சாணல் மூலம் கடுக்கரை, காட்டுப்புதூர், திடல், தெள்ளாந்தி, வீரமார்த்தாண்டன்புதூர், செண்பகராமன்புதூர், தோவாளை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
அழகியபாண்டிபுரத்தில் இருந்து உலக்கை அருவிக்கு செல்லும் சாலையில் தோவாளை சாணல் உள்ளது. காட்டுப்புதூர் ஊராட்சி, துவச்சியிலுள்ள தோவாளை சாணலில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது துவச்சியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நீர்வள ஆதார அமைப்பு மூலம் ரூ. 1 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நடைபெற்று வருவதால் பேச்சிப்பாறை அணை தண்ணீர் ஜுன் 1-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் தோவாளை சாணலுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவத்தில் நெற்பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பெயரில் பதிவு செய்யலாம். கன்னிப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஜுலை 31-ம் தேதி ஆகும்.
இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் இறுதி நேர விரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இத்தொகையில் விவசாயிகள் இரண்டு சதவீதம் மட்டும் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 716/- கட்டினால் போதும்.
இத்தொகையினை கட்ட இயலாத விவசாயிகள் செல்பேசி எண் 9444990009-ல் தொடர்பு கொண்டு தங்களது விபரத்தை தெரிவித்து காப்பீட்டு தொகை கட்டுவதற்குரிய தொகையினை பெறலாம். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் ஏதெனில் விண்ணப்பம் மற்றும் முன்மொழிவு படிவம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் கார்டு நகல், சிட்டா அடங்கல் ஆவணம் ஆகும். சொந்த நிலம் உள்ளவர்கள் பட்டா அடங்கல் நகலினை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று இணைத்து வழங்க வேண்டும்.
இது சம்மந்தமாக முதல் விவசாயியாக கடுக்கரையை சார்ந்த விவசாயி அய்யப்பன் தலைமையிலான 10 விவசாயிகளுக்கு நேற்று (25-07-2024) தோவாளையில் பயிர் இன்சூரன்ஸ் தொகை கட்டுவதற்கு ரூ. 8 ஆயிரத்தினை விவசாயி அய்யப்பனிடம் வழங்கபட்டது. இதன் மூலம் காப்பீடு உறுதி செய்ய சம்மந்தப்பட்ட வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோவாளை சாணல் மூலம் பயன்பெறும் நெற்பயிர் விவசாயிகளில் காப்பீட்டு தொகை கட்ட முடியாத விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்பொழுது அரசால் தண்ணீர் திறந்து விடாத சூழ்நிலை காரணமாக, மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில் கொண்டு, இயற்கை சீற்றத்திற்கு மட்டுமல்லாமல், அரசின் கவனக்குறைவு, மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவு, நீர்வள ஆதார அமைப்பின் கவனக்குறைவு காரணமாக தோவாளை சாணல் தண்ணீரை நம்பி இருக்கும் கன்னிப்பூ பயிர்கள் கருகும் சூழ்நிலையில் இருப்பதால் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி காப்பீட்டு திட்டத்தில் இதனை கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்.
இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் எடுத்து விரைந்து பெற்றுத்தர கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.