நாகர்கோவில் அக் 21
குமரி மாவட்டம் தோவாளை கால்வாயில் விவசாயிகளுக்கு தெரிவிக்காமல் எந்தவித முன் அறிவிப்புமின்றி தண்ணீரை நிறுத்துவது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கி மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற நிலை எக்காலத்திலும் வராமல், விவசாயிகள் பாதிக்க படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பும், வேளாண்மைத் துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென தளவாய்சுந்தரம் எம் எல் ஏ தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேச்சிப்பாறை அணையிலிருந்து வருகின்ற தண்ணீர் தோவாளை கால்வாய் வழியாக தோவாளை பாசனக் கடை வரம்பு நிலங்களுக்கு செல்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வந்தன. தற்போது தோவாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி நடவு பணி நடைபெற்று வருகிறது. தோவாளை கால்வாய் மற்றும் சில கால்வாய் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக காரணம் தெரிவித்து தோவாளை கால்வாய் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் தோவாளை கால்வாய் மூலம் பயன் பெறும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தண்ணீர் வராததால் தொடர்ந்து பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் செண்பகராமன்புதூரில் உள்ள தோவாளை கால்வாயில் விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்போன்று தோவாளை மற்றும் செண்பகராமன்புதூர் விவசாயிகள் நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் முன்பு முற்றுகை போராட்டமும் நடத்தி உள்ளனர். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் தோவாளை சாணலை அடைத்தது தான்.
இதைப்போன்று தோவாளை கால்வாயின் மூலம் பயன் பெறுகின்ற அழகப்பபுரம், அஞ்சுகிராமம் கடை வரம்பு பகுதிகளிலும் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தோவாளை சாணல் மூலம் பயிர் செய்யும் விவசாயிகள் பயிர் செய்த பிறகு சாணலை அடைப்பதற்கு முன்பு விவசாய பெருமக்களிடம் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். விவசாயிகள் பயிர் வைத்து நாற்று நட்ட பிறகு தூர் வாருதல் என்ற அடிப்படையில் தோவாளை சாணலில் தண்ணீரை நிறுத்தி வைப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம், நீர்வள ஆதார அமைப்பு, வேளாண்மைத்துறை ஆகிய மூன்று துறைகள் இணைந்து தண்ணீர் எப்போது திறக்கப்படும், எப்போது அடைக்கப்படும் என்பதை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென பலமுறை கடிதம் மூலமாகவும், ஆய்வுக் கூட்டங்கள் மூலமாகவும் எனது கருத்துகளை பதிவு செய்துள்ளேன். இருந்த போதிலும் துவச்சி பகுதியில் சீரமைப்பு பணிகள் நடக்கும் போது, இப்போது மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற தூர் வாரும் பணிகள் அப்போதே நடைபெற்றிருந்தால் இந்த பாதிப்பு இப்போது ஏற்பட்டிருக்காது. தோவாளை சாணலை தூர் வார அரசு ஒதுக்கி உள்ள நிதி ஒதுக்கீடு விவரங்கள், எத்தனை நாட்களில் இப்போது நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகள் முடிவடையும் என்பதை எல்லாம் விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு மேற்கூறிய மூன்று துறைகளின் முக்கிய பொறுப்பாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக இந்த மூன்று துறைகளும் ஆலோசனை நடத்தி விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை போக்கிடவும், நெற்பயிரினை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு எந்த தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.
கும்பப்பூ சாகுபடி பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு தோவாளை கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே தீர்வு காண முடியும். அதற்கேற்ப நடைபெறுவதாக கூறப்படும் தூர் வாரும் பணிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும். தோவாளை சாணலில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால் கும்பப்பூ சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் நெற்பயிரிடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும் துவச்சி பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு தோவாளை சாணலில் தண்ணீரை திறந்து விட சட்டமன்றத்திலும் குரல் எழுப்பினேன். இந்த அவல நிலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தூர் வாரும் பணிகளை விரைவு படுத்தி விரைவில் முடித்து தோவாளை சாணலை மீண்டும் திறக்க வேண்டும் என கூறியுள்ளார்.