ஈரோடு பிப் 15
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கடந்த ஒரு மாத காலமாக திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் தெரு நாய்கள் கடித்து 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன. கடந்த வாரத்தில் நாய்கள் கடித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளும், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், மூலனூர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஆடுகளும் பலியாகி உள்ளன. இதை தடுக்க கோரியும் இறந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு கோரியும் விவசாயிகள் போராடிய பொழுது தாராபுரம் வட்டாட்சியர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இது வரை எந்தவித நஷ்டஈடும் வழங்கவில்லை. நாய்களையும் பிடிக்கவில்லை.
இதற்கிடையே ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ராமலிங்கபுரம் பகுதியில் நாய்கள் கடித்து 25 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன. விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட போது பேச்சு வார்த்தை நடத்த வந்த பெருந்துறை வட்டாட்சியர் கண்முன்னே தெருநாய்கள் கூட்டமாக வந்து ஆட்டை கடித்து குதறி உள்ளது.
விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க தவறிய அமைச்சர்களுக்கும் தி மு க அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.