கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நாய்கள் சுதந்திரமாக உலா வருவதும் ஓய்வெடுப்பதுமாக உள்ளதால் நோயாளிகள் நாய்களை கடந்து செல்ல பயப்படுகின்றனர்.
உணவு இருக்கும் இடங்களில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கும். உள்நோயாளிகளும் அவர்களுடன் இருக்கும் உறவினர்களும் சாப்பிட்ட உணவை ஆங்காங்கே குப்பைத்தொட்டியில் கொட்டுவதால் நாய்கள் அவற்றை சாப்பிட்டு மருத்துவமனையிலேயே முகாமிடுகின்றன.
காலை 7:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனைத்து புறநோயாளிகள் பிரிவிலும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுகின்றனர்.
ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் மருத்துவமனை காரிடார்களில் நாய்கள் சுதந்திரமாக படுத்து ஓய்வெடுக்கின்றன. சில நேரங்களில் அவற்றுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. நோயாளிகளைப் போல வார்டு வார்டாக தேடிக்கொண்டே செல்கின்றன.
வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் நாய்கள் குறுக்கே வரும் போது உடனடியாக செயல்பட முடியாமல் பரிதவிக்கின்றனர். என்ன தான் சாதுவாக வலம் வந்தாலும் நாய்களின் இருப்பிடம் மருத்துவமனை இல்லை என்பதை பேரூராட்சி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உணர்ந்து நாய்களை பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்