கிருஷ்ணகிரி, செப். 13–
எதிர்கால சவால்களை சமாளிக்க மாணவர்களை, தி.மு.க.,வில் இடம்பெற செய்ய வேண்டுமென மாணவரணி அமைப்பாளர்கள் நேர்காணல் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து நேர்காணலை துவக்கி வைத்து பேசினார். மாநில மாணவரணி இணை செயலாளர் ஜெரால்டு, மாநில துணை செயலாளர் வீரமணி நேர்காணலை நடத்தினர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெயந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி இணை செயலாளர் ஜெரால்டு பேசியதாவது:
தமிழகம் முழுவதும், தி.மு.க.,வில் பிரிக்கப்பட்டுள்ள, 72 மாவட்டங்களில், மூன்று மண்டலங்களிலும், தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. மாணவர் பருவத்தில் உள்ள, 40 சதவிதத்தினர், அரசியல் ஈடுபாடில்லாமல் உள்ளனர். அவர்களிடம் தி.மு.க., கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியில் மாணவரணியினர் ஈடுபட வேண்டும். அதற்காகவே படித்த இளைஞர்களை மாணவரணியில் சேர்க்க அமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போது, நடிகர்கள் உள்பட புதிதாக பலர் கட்சி துவங்கி வரும் நிலையில், மாணவர்கள் ஓட்டு முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதேபோல தமிழ்பேச்சாற்றல், எழுத்திலும் சிறந்து விளங்கி, எதிர்கால சவால்களை சிறப்பாக கையாள வேண்டும் என பேசினார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மாணவரணி துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.