தென்காசி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கு நிதியினை முறையாக கையாளுதல், சொத்துரிமை, இலவச சட்ட உதவி குறித்த தகவல்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு , குடும்ப வன்முறைகளிலிருந்து உரிய பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு கோல்டன் ஹாலில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர தெரிவித்ததாவது
தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்” அமைக்கப்பட்டுள்ளது. “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பயன்படுத்திட www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணைப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் மணமாகாத மகளிர் ஆகியோரின் நலனுக்காக கருத்தரங்குகள் / கருத்துப் பட்டறைகள் வாயிலாக நிதியினை முறையாக கையாளுதல் குறித்த கல்வி அறிவினை ஏற்படுத்துதல், சொத்துரிமை, குடும்ப வன்முறைகளிலிருந்து உரிய பாதுகாப்பு மற்றும் இதர இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு இலவச சட்ட உதவி, புதிய நலத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் ஏனைய உதவிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். இக்கருத்தரங்கின் மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் குறித்த செயல்பாடுகளும் மற்றும் அரசின் மூலம் கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தெளிவு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களிடையே ஏற்பட்டு அவர்கள் மூலம் பொதுமக்களை சென்றடையும் என்ற நோக்கில் இக்கருத்தரங்கு நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணைஇயக்குநர் / திட்ட இயக்குநர் / தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, பொது மேலாளர்(மாவட்ட தொழில் மையம்) மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், அஞ்சல் உபகோட்ட ஆய்வாளர் (அஞ்சல்துறை) ராமசாமி , வழக்கறிஞர் & நோட்டரி (மத்திய அரசு) முத்துலட்சுமி, கண்காணிப்பாளர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை) காட்வின் வேத ஞானராஜ் மற்றும் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்த பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை பணியாளர்கள், மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர்கள், சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.