நாகர்கோவில் பிப் 21
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தோட்டமலை பகுதியில் கரடி தாக்கி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சந்தித்து ஆறுதல் கூறி தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தோட்டமலை மலைவாழ் பழங்குடி கிராமத்தை சார்ந்த ராமையன் காணி (வயது 70), அவரது மகன் விஜய குமார் (வயது 40) ஆகிய இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள். 19-ம் தேதி மதியம் தோட்டத்தில் நல்ல மிளகு பறிக்க சென்றனர். நல்ல மிளகு பறித்து விட்டு திரும்பி வரும் போது, தண்ணீர் ஓடையின் அருகில் கரடி தன் குட்டியுடன் நின்றதை இருவரும் பார்த்துள்ளனர். இருவரும் சுதாகரிப்பதற்குள் தாய் கரடி திடீரென ராமையன் மீது பாய்ந்து அவரை கீழே தள்ளி அவரது முகத்தை தாக்கியது. தன் தந்தையை கடித்ததை பார்த்து கரடியை துரத்த முயன்ற விஜயகுமாரையும் கரடி தாக்கியது. அவருடைய வளர்ப்பு நாயால் இருவரும் உயிர் தப்பினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து மேல்சிக்கிச்சையாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
காயமடைந்த இருவரின் தீவிர காயத்தினை கண்டறிந்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் தர்சினி, கௌதின், மயக்க மருந்து சிகிச்சை நிபுணர் மரு.விஜய் ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழு நேற்று இரவே இவர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்கள். தற்போது இருவரும் அறுவை சிகிச்சை பிரிவில் கவனிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ள மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டது. என அவர் தெரிவித்தார்.
ஆய்வில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.இராமலெட்சுமி. உண்டு உறைவிட மருத்துவர் மரு.ஜோசப்சென். உதவி உறைவிட மருத்துவர் மரு.ரெனிமோள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் இருந்தனர்.