தருமபுரி மாவட்டம், ஏப். 29
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் பகுதியில் நகராட்சி குப்பை சேகரிக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் காரிமங்கலம் பேரூராட்சி குப்பை சேகரிக்கும் கிடங்கையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். காரிமங்கலம் பேரூராட்சி பகுதியில் சிறப்பு வரன்முறை இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு ஆட்சேபனையற்ற புறம்போக்கில் 5 ஆண்டுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு மாவட்ட அளவிளான குழு அமைத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க பரிந்துரை செய்யப்பட்ட பயனாளிகளுடன் கலந்தாய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, பேரூராட்சி தலைவர் மனோகரன், நகராட்சி ஆணையர் சேகர் மற்றும் நகர் நல அலுவலர் லட்சிய வர்மா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.