நாகர்கோவில் ஜூன் 3
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெப் கேமராவுடன் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் சட்டமன்ற தொகுதி வாரியாக எண்ணப்படுகிறது. இதையடுத்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஆறு அறைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒரு அறைக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குகள் தனியாக மற்றொரு அறையில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளை கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்து வாக்கு எண்ணும் அறை மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்களை பார்வையிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று கோணம் சாலையில் போக்குவரத்து நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
4-ந் தேதி காலையில் நாகர்கோவிலில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் புன்னை நகர் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. கோணத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் நூறு மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டையுடன் வரும் முகவர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முகவர்கள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்துள்ளது. சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனிஅறை தயார் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்குகள் 20 மேஜைகளிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான தபால் வாக்குகள் மூன்று மேஜைகளிலும் எண்ணப்படுகிறது. விளவங்கோடு சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கை மதியத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிகிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முடிவுகள் முழுமையாக தெரிய மாலை ஆகும் என்று தெரிகிறது.