கிருஷ்ணகிரி பாம்பாறு நீர்த்தேக்கத்தின் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று பாசனத்திற்காக 4,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 20.03.2025 முதல் 120 நாட்களுக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , திறந்து வைத்தார்
பாம்பாறு நீர்த்தேக்கம் 1983 -ம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு நீர்த்தேக்கத்தின் முழு நீர்மட்ட உயரம் 19.68 அடி. இதன் முழு கொள்ளளவு 280 மி.க.அடி ஆகும். பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-2025 ஆம் ஆண்டு (பசலி 1434) ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக 20.03.2025 இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை, புளியம்பட்டி, எட்டிப்பட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களைச் சார்ந்த 2,501 ஏக்கர் நிலங்களும், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி மற்றும் ஆண்டியூர் ஆகிய 4 கிராமங்களிலுள்ள 1,499 ஏக்கர் என மொத்தம் 16 கிராமங்களிலுள்ள 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றது.
முதல் மண்டலத்திற்கு 0 கி.மீ 11.725 கி.மீ IR, II மற்றும் III பிரிவு கால்வாய் மூலம் 2501 ஏக்கரும், இரண்டாவது மண்டலத்திற்கு 11.725 கி.மீ 31.500 கி.மீ வரை பிரதான கால்வாய் -மூலம் 1499 ஏக்கர் என மொத்தம் 4000 ஏக்கர் நிலங்கள் பயனடையும்.
எனவே, விவசாய பெருமக்கள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பாம்பாறு நீர்த்தேக்கத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும், பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்படும் நீர் செல்லும் பாதைகளை நீர்வளத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாவக்கல் கிராமம், சுப்பையன் ஏரிக்குச் செல்லும் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு, கால்வாய்களினிடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொருட்டு, விவசாயிகளுக்கு முறையாக அறிவிப்பு கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஏரிக்குச் சென்று விவசாயிகளின் பாசன வசதி பெறும் வகையில் உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பாம்பாறு நீர்த்தேக்கத்தில், வேளாண்மைத்துறை சார்பாக, 11 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 91 ஆயிரத்து 625 மதிப்பில் வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் .செந்தில்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .பச்சையப்பன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் .ஆறுமுகம், உதவி பொறியாளர் .ஜெயக்குமார், ஊத்தங்கரை வட்டாட்சியர் .திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .பாலாஜி, .தவமணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் .உஷாராணி குமரேசன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.