ஈரோடு டிச 5 சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரவலசு, வடமுகம் வெள்ளோடு ஊராட்சிப் பகுதிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு பகுதியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.437.74 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 22 ஊராட்சிகளைச் சேர்ந்த 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளையும், வடமுகம் வெள்ளோடு ஊராட்சி செம்மாண்டம்பாளையம் காலனி பகுதியில் ராமன் வீடு முதல் மாரியம்மன் கோவில் வரை 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.11.39 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளத்துடன் கூடிய வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 143 வீடுகளுக்கு ஆணை வழங்கப்பட்டதில் சென்னிமலைபாளையம் புதூர் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் வீதம் ரூ.15.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 5 வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளியுடன் கலந்துரையாடினார். மேலும் செம்மாண்டம்பாளையம் பகுதியில் ஊரக குடியிருப்புகள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 259 வீடுகள் மறு சீரமைக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, மாரியம்மாள் என்பவரின் வீடு மறுசீரமைக்கப்பட்டவதை பார்வையிட்டு, உரிமையாளரோடு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தலா ரூ.55,000 வீதம் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சென்னிமலை பேரூராட்சி அம்மாபாளையத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.18.13 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காய்திரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாஸ்கர் பாபு, பாலமுருகன், ஒன்றிய பொறியாளர் பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.