ராமநாதபுரத்தில் ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம், டிச.9-
பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மாநில அரசு அமல்படுத்த கோருவது தொடா்பான ஆலோசனனக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமலிலிருந்த இனச்சுழற்சி அடைப்படையில் பதவி வழங்கும் நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள், பட்டியல் & பழங்குடி வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பதவி உயர்வு பெறுவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அரியானா, கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும், மத்திய அரசுப் பணிகளிலும் அமலில்
உள்ளதைப் போன்று, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16 (4-A) ஐ அமல்படுத்தி, பட்டியல் & பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பல்வேறு பட்டியல் சமூக அலுவலர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இக்கோரிக்கை இது நாள் வரை நிறைவேற்றப்படாததால் அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்தைக் குழு வரும் பிப்.2025 சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக முடிவு செய்து, மண்டல வாரியாக கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி பல்வேறு பட்டியல் சமூக அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ராமநாத புரத்தில் நடந்தது. இதில் மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பொறியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தினர்.