பரமக்குடி,டிச.24: பரமக்குடியில் தேவேந்திரகுல வேளாளளர் சங்கங்களில் வட்டார ஒருங்கிணைப்பு குழு சார்பில், நேற்று,சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் மணிமண்டபம் கட்டுவதை தடுக்க வழக்கு தொடர்ந்ததை கண்டித்தும், தென் தமிழகத்தில் தொடர்ந்து சாதிய வன்கொடுமை மற்றும் தொடர் சாதிய ரீதியான படுகொலையை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை வழக்குகளை சிறப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தொடர்ந்து சமூக நல்லிணத்திற்கும், தமிழ் சமூகம் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.இந்த நிலையில், காவல் துறை ஆர்ப்பாட்டடத்திற்கு அனுமதி மறுத்தது. இந்த நிலையில் ,நேற்று காலை பரமக்குடி போகலூர், முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, பார்த்திபனூர், திருவாடனை ஆர்எஸ் மங்கலம், திருப்புல்லாணி ஆகிய வட்டாரங்களை சேர்ந்தவர்கள் ஓட்டப்பாலம் பகுதியில் 1500 பேர் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா, செயலாளர் புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவை தலைவர் அழகர்சாமி பாண்டியன், முதுகுளத்தூர் வட்டார தலைவர் சேகர் உள்ளிட்ட வட்டார சங்க நிர்வாகிகளை கைது செய்தனர். இதனால், சிறிது நேரம் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்களையும் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் மதுரை -ராமநாதபுரம் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் பெண்கள் 60 பேர் உள்பட 372 பேர் க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னெச்சரிக்கையாக 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் . அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக தண்ணீர் பீச்சியடிக்கும் வஜ்ரா வேன் நிறுத்தப்பட்டிருந்தது.
1 படம்
ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தலைவர்களை போலீசார் கைது செய்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்.