புதுக்கடை, டிச-18
கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிள்ளியூர் மேற்கு வட்டார குழு சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கிள்ளியூர் பேரூராட்சி க்குட்பட்ட வேங்கோடு ஏலா மிகப்பெரிய விவசாய நிலப்பகுதி ஆகும். இங்கு சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 100 ஏக்கர் நன்செய் நிலம் விவசாயம் செய்யமுடியாமல் பாழ் நிலமாக மாறிப்போய் உள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட ஏலா பகுதியில் தேவையான முறையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வடிகால் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிள்ளியூர் மேற்கு வட்டார குழு சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதுக்கடை அருகே, வெள்ளையம்பலம் ஜங்சனில் நடந்த இப்போராட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் வில்சன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் துவக்கி வைத்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவி, ஜாண், செல்லநாடார், கிறிசாந்து மேரி, ஜஸ்டின், ஜவஹர் உட்பட பலர் பேசினர். முடிவில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி முடித்து வைத்தார்.
போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.