நாகர்கோவில் ஆக 9
குமரி மாவட்ட இராஜாக்கமங்கலம் ஆலன் கோட்டை சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அரசு மதுபான கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் ஒருங்கிணைந்த தொகுதி தலைவர் ஜெயன்றின் சார்பாக மண்டல செயலாளர் பெல்வின்ஜோ தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
குமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலன்கோட்டை கிராமத்தில் ஆலன் கோட்டை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்கள் பெருந்துயரடைந்து வருகின்றனர்.
ஆலன் கோட்டை கிராமத்தை சுற்றி அமைந்துள்ள முஞ்சிறவிளை, கணபதிபுரம், பூச்சிக்காடு, அழகன்விளை, கோவில்புரம், பரமன்விளை, புதூர், கல்லுக்கட்டி போன்ற கிராம பொதுமக்கள் அதிகமாக பேருந்தில் ஏறிச் செல்ல ஆலன்கோட்டை சந்திப்பையே பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாது ஆலங்கோட்டை சந்திப்பை சுற்றி அமைந்துள்ள மக்களின் தினத்தேவைக்கான காய்கறி கடை, மீன் கடை, உணவுத்தேவைக்கான பொருட்கள். மற்றும் ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி, பள்ளிக்கூடம், கல்லூரி, மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்றவை அனைத்தும் ஆலங்கோட்டை சந்திப்பை சுற்றியே அமைந்துள்ளன.
ஆனால் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வீரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மதுபான கடையால் பேருந்தில் செல்வதற்கும் தினத்தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கும், கல்விச்சாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கும், வங்கி மற்றும் ரேஷன் கடைக்கு செல்வதற்கும் முடியாமல் குடிகாரர்களால் பொதுமக்கள் மிகுந்த இன்னல் அடைகிறார்கள். மேலும் சாலைகளின் ஓரங்களிலிருந்து குடித்துவிட்டு விரும்பத் தகாத செயல்களில் ஈடுபடுவதோடு மாணவ மாணவிகள் பேருந்தில் பயணம் செய்ய இடையூறாக நின்று கொண்டிருக்கிறார்கள் முன்பு மதுக்கடை மட்டுமே செயல்பட்டது தற்பொழுது மது குடிப்பகமும் சேர்ந்து செயல்பட்டு வருவதாலும் சாலையை ஓரங்களில் மது அருந்துவது போன்ற தகாத செயல்களை மாணவர்கள் காண்பதால் அவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடாமலும், பொதுமக்களை பாதுகாக்கவும், சமூகத்தில் நன்மை சிறக்கவும், மக்கள் அச்சமின்றி வாழவும் வேண்டி சமுதாயத்தை சீரழித்து வருங்கால இளைய தலைமுறை பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் ஆலன்கோட்டை சந்திப்பில் செயல்படும் அரசு மதுபானக்
கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் முன்னாள் குமரி பாராளுமன்ற வேட்பாளர் மரிய ஜெனிபர், ஹிம்லர், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தீபக், சுரேன் ஜோயல், குமரி தெற்கு,மேற்கு, வடக்கு தொகுதி பொறுப்பாளர்களும், கட்சியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.