இரணியல், டிச. 4
தக்கலை மதுவிலக்கு துணை சூப்பிரண்ட் சந்திரசேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரவீனா தலைமையிலான போலீசாருக்கு ஒழுகினசேரியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் (35) என்பவரிடம் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்தபோது, அழகியபாண்டி புரத்தில் வசிக்கும் அவரது மைத்துனர் சகாய மைக்கேல் ராஜ் (34) என்பவர் அந்த கஞ்சா கொடுத்தார் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மைக்கேல் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கே சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டு மாடியில் சுமார் பத்து கஞ்சா செடிகள் வளர்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சகாய மைக்கேல், ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.