நாகர்கோவில் ஜூன் 1
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஒன்றிய சாலையாக இருந்த தோவாளை – தாழக்குடி இணைப்புச் சாலை நெடுஞ்சாலை துறை சாலையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ. 3 கோடி மதீப்பீட்டில் சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதன் தொடர்ச்சியாக இச்சாலையின் உப்பாத்து ஓடை பகுதியில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலை கோட்ட உதவி இயக்குநரிடம் வலியுறுத்தினார்.
அ.இ.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் தோவாளை – தாழக்குடி இணைப்புச் சாலையில் உப்பாத்து ஓடை பகுதியில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ நேரில் பார்வையிட்டு அவர் தெரிவிக்கையில்:- இச்சாலையில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மிக முக்கியமான பணியாகும். இப்பணிகளை தரமானதாகவும், சிறந்த முறையிலும், மக்களிடமிருந்து எவ்வித புகார்களும் வராத வகையில் திறன்பட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிறைவேற்றிட வேண்டும். இச்சாலை தோவாளையிலிருந்து தாழக்குடி வழியாக இறச்சகுளம் செல்வதற்கும் பிற பகுதிகளுக்கு செல்வதற்கும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனை மனதில் கொண்டு காலதாமதம் இல்லாமல் விரைவில் பணிகளை நிறைவேற்றிட வேண்டும். இதற்கு ஒப்பந்ததாரர் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என அவர் கூறினார்.
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருடன், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், நெடுஞ்சாலை கோட்ட உதவி இயக்குநர் திருவருட் செல்வன், ஒப்பந்ததாரர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.